யாழ்.ஏழாலை ந. பாலசுப்பிரமணியம் அவர்கட்கு கலாபூசணம் விருது

யாழ்.ஏழாலை ந. பாலசுப்பிரமணியம் அவர்கட்கு கலாபூசணம் விருது

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகப் பக்தி இலக்கியத் துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் யாழ்.ஏழாலை கிழக்கு ஏழாலையைச் சேர்ந்த நல்லசேகரம்பிள்ளை பாலசுப்பிரமணியம் கலாபூசணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற 30 ஆவது கலாபூசணம் அரச விருது வழங்கல் வைபவத்தின் போதே கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய பௌராணிகர் குடும்பத்தின் வழித் தோன்றலில் பிறந்து இளம் வயதிலிருந்தே சமய இலக்கியங்களில் ஆர்வம் கொண்டு விளங்கிய இவர் கந்த புராணம்,பெரிய புராணம், திருவிளையாடற்புராணம் போன்ற புராணபடனங்கள் நிகழ்த்துவதிலும் வல்லாளர் புராணபடனத்தில் மாத்திரமல்லாமல் பன்னிரு திருமுறைகள் ஓதுவதிலும் ஈடிணையற்ற ஒருவர். ஏழாலை மகாவித்தியாலயம், டிறிபேக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்.

இவர் முதன்முதலாக 1985 ஆம் ஆண்டு மார்கழி மாதம் சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் மணி வாசகர் சரித்திரத்தை எடுத்தியம்பும் திருவாதவூரடிகள் புராணபடனம் செய்ய ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முதற் கொண்டு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயம், தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம், உடுவில் முருகமூர்த்தி ஆலயம், புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலயம், குப்பிளான் கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயம் என இதுவரை 50 இற்கும் மேற்பட்ட ஆலயங்களில் புராண படனம் நிகழ்த்தியுள்ளார். மேலும் புராண பெருமையைப் பறைசாற்றும் நாடகங்களான வள்ளி திருமணம், நந்தனார் கதை, திருநாவுக்கரசு நாயனார் வரலாறு முதலிய நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.

அத்துடன் இவர் புராணபடன வித்தகர், புராணபடனக் கலைச் செல்வன், சிவஞானச் செல்வன், சிவநெறிச் செல்வன், சிவஞான ஏந்தல் போன்ற சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன அமைதிக்கு ஆன்மீகம் நல்லதொரு வழிப் பாதை.அதை உணர்ந்து ஒழுகினால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். ஆனால்,இன்றைய காலகட்டத்தில் ஒரு சில ஆன்மீகவாதிகள் விடும் தவறு காரணமாக ஏனைய ஆன்மீக வாதிகளும் தவறான சமூகக் கண்ணோட்டத்துக்கு ஆளாவது தவிர்க்க முடியாததொன்றாகக் காணப்படுகிறது.

இந்த நிலை மாற வேண்டும்.பகுத்தறிவுள்ள நாம் உண்மை ஆன்மீக வாதிகள் யாரென்பதை உய்ந்துணர்ந்து அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப சமூதாய மாற்றத்திற்கு வித்திடுபவர்களாக எம்மை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் இளமைக் காலத்திலிருந்து ஆன்மீகப் பக்தி இலக்கியத் துறையில் ஒருவர் தம்மைப் பூரணமாக ஈடுபடுத்துவது என்பது சாதாரணமான விடயமல்ல. இவ்வாறான பல் துறைசார் அனுபவம், ஆற்றலுள்ள பெரியோர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வருடாவருடம் அரசு கலாபூசணம் விருது வழங்கிக் கௌரவிப்பது வாழும் போதே கிடைக்கும் மிக உன்னத கௌரவமாகும். இவ்வாறான பெரியோர்களை நாமும் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டியது அவசியம்.