யாழ்.குப்பிளானில் பலசரக்குக் கடையில் ஓடு பிரித்துப் பொருட்கள் திருட்டு

யாழ்.குப்பிளானில் பலசரக்குக் கடையில் ஓடு பிரித்துப் பொருட்கள் திருட்டு

இரவு வேளையில் பலசரக்குக் கடையொன்றில் ஓடு பிரித்து உள்ளிறங்கிய திருடர்கள் சுமார் 25,000 ரூபா பெறுமதியான பொருட்களைக் களவாடிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை (04.03.2015) குப்பிளான் தெற்குக் கேணியடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சீனி, அரிசிப் பைக்கற்றுக்கள், பால்மா வகைகள், சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது. இது குறித்துச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடையின் உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு 08.30 மணிக்குக் கடையைப் பூட்டி விட்டு நேற்று வியாழக்கிழமை காலை 07.30 மணிக்கு கடையைத் திறந்து பார்த்த போது ஓடு பிரிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கடையின் உள்ளே சென்று பார்த்த போது பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தெரிய வந்தது. ஓடு பிரித்து உள்ளிறங்கிய திருடர்கள் திருடிய பின் பின்வாசல் கதவால் தப்பிச் சென்றுள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் இராசலிங்கம் ரவிச்சந்திரன்  கருத்துத் தெரிவிக்கையில்,

 

 

நான் கடந்த 12 வருட காலமாக இந்தக் கடையை நடாத்தி வருகிறேன். மிகவும் சிறிய முதலீட்டின் மத்தியில் குடும்ப வருமானம் போதியளவு வரவின்றிய நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

நேற்றிரவு அரிசி, மா, சீனி உட்பட 25,000 ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். என்றார்.

இதேவேளை, குடிமனைகள் நெருக்கமாகவுள்ள பகுதியில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.