யாழ். கைதடிச்சந்தி விபத்தில் 20 வயது இளைஞர் பலி

யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

கைதடிச் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹன்ரர் வாகனம் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த இருவரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காது அங்கு அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் கைதடி எரிபொருள் நிலையத்தில் பணிபுரியும் கைதடி கிழக்கைச் சேர்ந்த இந்திரன் வாகீசன் (வயது 20) என்பவரே உயிரிழந்தார்.

நாவற்குழி கிழக்கைச் சேர்ந்த யோகராசா பிரசாந்த் (வயது 20) என்பவர் காயமடைந்தார்