யாழ்.கொக்குவில் சந்தியில் வீதி விபத்து.மாணவி உட்பட மூவர் காயம்

யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதி கொக்குவில் சந்தியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பாடசாலை மாணவி உட்பட இரு பொலிஸார் காயமடைந்தனர்.

நேற்று மதியம் 1.45 மணியளவில் கொக்குவில் ஆடிய பாதம் வீதியில் இருந்து பாடசாலை மாணவியை ஏற்றி வந்த முச்சக்கரவண்டியொன்று, காங்கேசன்துறை பிரதான வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி வேகமாகச் சென்ற போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸார் மற்றும் பாடசாலை மாணவியும் காயமடைந்தனர்.

காயமடைந்த மாணவி அருகில் உள்ளவர்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இவ்விபத்து பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி முச்சக்கரவண்டி பயணித்ததனால் ஏற்பட்டதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

பாடசாலை முடிவடையும் நேரத்தில் மிகவேகமாக வந்த போக்குவரத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்தது.

விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.