யாழ் சங்கானை பகுதியில் லொறி முற்றாக எரிந்து நாசம்

யாழ்  சங்கானை பகுதியில் லொறி முற்றாக எரிந்து நாசம்

யாழ்ப்பாணம் சங்கானை சந்தைக்கு அண்மையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று முற்றாக எரிந்து நாசமானது. நேற்று திங்கட்கிழமை இரவு 9.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

கொப்பறா தேங்காய்களை ஏற்றியவாறு நின்ற லொறியே தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்துக் குறித்து உடனடியாக யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.

விரைந்து செயற்பட்ட தீயணைப்புப் பிரிவினர் அரை மணி நேரத்துக்குள் அங்கு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஒரு பவுசர் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

இதனால் லொறி முற்றாக எரிந்து நாசமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து லொறி உரிமையாளர் வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் லொறி தீப்பற்றியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.