யாழ். புன்னாலைக்கட்டுவனில் ஆலய பூசகர் வீட்டில் துணிகரத் திருட்டு

யாழ். புன்னாலைக்கட்டுவனில் ஆலய பூசகர் வீட்டில் துணிகரத் திருட்டு

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கில் அமைந்துள்ள நாச்சிமார் கோவில் (ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்) பிரதம குரு எஸ்.குகானந்த சர்மாவின் வீட்டினுள் முன்பக்கக் கதவினூடாக ஹெல்மட் அணிந்து உள்நுழைந்த திருடர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள், வெள்ளிப் பொருட்கள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களையும் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றனர்.

இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 09.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஆலயப் பூசகர் ஆலயக் கடமைகளை முடித்து விட்டு மீண்டும் ஆலயத்திற்குச் சென்று வருவதற்காக முன் கதவை ஒரு பூட்டுப் பூட்டி விட்டு இலேசாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் வீட்டின் முன்பக்க யன்னல் கதவினூடாக ஐயா….. என்று கூப்பிட்டுள்ளார்.

அப்போது தனக்குத் தெரிந்தவர்கள் தான் வந்துள்ளனர் என்று நினைத்த பூசகர் முன்பக்கக் கதவைத் திறந்துள்ளார். அங்கு குறித்த நபருடன் வேறு சிலரும் ஹெல்மட் அணிந்தவாறு நிற்பதைக் கண்ட அவர் உடனே கதவைப் பூட்ட முற்பட்டுள்ளார். அவ்வேளை கதவைப் பலமாகத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த திருடர்கள் ஆலயப் பூசகரைக் கீழே தள்ளி விழுத்தித் தாக்கினார்கள்.

ஆலயப் பூசகரின் மனைவியையும் அச்சுறுத்தினார்கள். இருவரையும் வெவ்வேறு அறைகளில் கொண்டு சென்று அவர்கள் சத்தம் போடாதவாறு வாய்களுக்குப் பிளாஸ்ரர் போட்டார்கள். இருவரின் கைகளையும் கால்களையும் துணிகளாலும் வயருகளாலும் கட்டினார்கள்.

ஆலயப் பூசகரிடம் காசு, நகைளை எங்க வைச்சிருக்கிறாய்? கோயிலுக்கு இனிமேல் போவியா? பூசை செய்வியா? என்று கேட்டவாறு திருடர்கள் கம்பியால் கடுமையாகத் தாக்கியதுடன் மனைவிக்கும் கால்களாலும் கைளாலும் தாக்கினர். இதனால் பூசகரின் பிடரியில் படுகாயம் ஏற்பட்டதுடன் மனைவி அவ்விடத்திலேயே மயக்கமடைந்துமுள்ளார்.

இச் சந்தர்ப்பத்தில் திருடர்கள் ஆலய நகைகள் உட்பட சுமார் 25 பவுண் தங்க நகைகளையும், ஒரு இலட்சம் ரூபா பணம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நவீன கைத்தொலைபேசி, மற்றும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி என்பவற்றையும் சுருட்டிக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் திருடர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றதையடுத்து திருடர்கள் துண்டித்திருந்த தொலைபேசி வயரை மீண்டும் கொழுவி குறித்த வீட்டார் அயலவர்களுக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆலயப் பூசகர் அயலவர்களின் உதவியுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

திருடர்கள் கூரிய கத்திகள், வாள்கள் என்பவற்றைத் தம் வசம் வைத்திருந்ததாக குறித்த வீட்டார் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸாருக்கு அயலவர்கள் தொலைபேசியில் முறையிட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பலாலி, அச்சுவேலி முகாம்களைச் சேர்ந்த இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் விசாரித்தும் சென்றனர். தடயவியல் நிபுணர்களும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

குறித்த திருட்டுச் சம்பவம் அப் பகுதி மக்களை மாத்திரமன்றி அயற்கிராம மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.