யாழ் புன்னாலைக்கட்டுவனில் இரவு வேளையில் கரட் திருட்டு

யாழ் புன்னாலைக்கட்டுவனில்   இரவு வேளையில்  கரட் திருட்டு

யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு மூன்றாம் சந்தியடிப் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் இரவு வேளையில் கரட் திருட்டு இடம்பெற்றுள்ளது.

திருடர்கள் கரட்டை இழுத்தெடுத்ததுடன் அப் பகுதியில் வைத்து கரட்டை அறுத்தெடுத்தும் சென்றுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (31.01.2015) இரவு இடம்பெற்ற இத் திருட்டுச் சம்பவத்தில் சுமார் 08 ஆயிரம் ரூபா பெறுமதியான கரட்களே இவ்வாறு திருட்டுப் போயுள்ளன.

அத்துடன் அப் பகுதியிலுள்ள தென்னை மரத்தில் பச்சை இளநீர்களைப் பிடுங்கி அவ்விடத்திலேயே வைத்து வெட்டிக் குடித்து விட்டுக் கோம்பைகளை அவ்விடத்திலேயே எறிந்து விட்டும் சென்றுள்ளனர்.

திருடர்கள் வந்ததற்கான கால் அடையாளங்களும் தோட்டப் பகுதியில் காணப்படுகின்றன.

 

 

யாழ்.புன்னாலைக்கட்டுவனில் இரவு வேளையில் இடம்பெறும் கோவாத் திருட்டு:

யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியில் ஒரு மாதத்திற்குள் மூன்று இடங்களிலுள்ள தோட்டங்களில் இரவு வேளையில் அடுத்தடுத்து நான்கு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கோவாத் திருட்டுச் சம்பவத்துடன் இதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்குத் தொடர்பிருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாகவும், அண்மைக்காலங்களில் நள்ளிரவு வேளையில் சந்தேகத்துக்கிடமான ஹன்ரரொன்றின் நடமாட்டத்தைத் தமது பகுதியில் காண முடிவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள தோட்டமொன்றிற்கு ஹன்ரரில் இரவு வேளையில் வந்த இனந்தெரியாதவர்கள் சுமார் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான கோவாக்களை வெட்டியெடுத்தச் சென்றனர்.செ.கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான கோவாத் தோட்டத்திலேயே அண்மையில் இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பில் தோட்ட உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் தெற்கு மூன்றாம் சந்திக்கு அண்மையிலுள்ள கோவாத் தோட்டத்தில் இரவு வேளையில் சென்ற திருடர்கள் சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான கோவாக்களைத் திருடிச் சென்றுள்ளனர்.முகுந்தன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்திலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் பிள்ளையறுத்தான் தோட்டப் பகுதியில் நவரத்தினம் கண்ணன்(கண்ணன் கடை உரிமையாளர்) என்பவருக்குச் சொந்தமான சுமார் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான கோவாக்களும் அண்மையில் திருடிச் செல்லப்பட்டுள்ளன.இதே தோட்டத்தில் இதற்கு முன்னரும் சுமார் 05 ஆயிரம் ரூபா பெறுமதியான கோவாக்கள் திருடப்பட்டுள்ளன.

யாழ்.குடாநாட்டில் கடந்த வருட இறுதியில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் அண்மைக்காலமாக மரக்கறிகளின் விலைகள் சூடுபிடித்துக் காணப்பட்டன.இந்த நிலையில் பெருமளவு முதலீட்டில் கோவாச் செய்கையிலீடுபட்ட தாம் பொருளாதார ரீதியாகப் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் குறித்த திருட்டுச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் எதிர்காலத்திலும் தொடராமலிருக்கச் சுன்னாகம் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வெண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.