புன்னாலைக்கட்டுவனில் மண் சரிவில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை

புன்னாலைக்கட்டுவனில்  மண் சரிவில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை

பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்த மீரியபெத்தை பகுதியில்  இடம்பெற்ற பாரிய மண் சரிவில் சிக்கி உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வொன்று நேற்றுச் சனிக்கிழமை (01.11.2014) பிற்பகல் 06.15 மணி முதல் யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு நாச்சிமார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு துர்க்கா சனசமூக நிலைய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் அப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து நடாத்திய இந்த நிகழ்வு ஈவினை பிரதேச கிராம அலவலர் சோ.பரமநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து முன்னதாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவராலும் உயிர் நீத்த மலையக உறவுகளுக்கு தீபமேற்றி உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாச்சிமார் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சபாரத்தினக் குருக்கள் பிரார்த்தனை உரையாற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ்.சின்மயா மிசனைச் சேர்ந்த ஜாக்கிரத் சைதன்ய சுவாமிகள், தமிழ்.சி.என்.என் இன் யாழ்.மாவட்ட இணைப்பாளர் நா.சசீந்திரன், கொட்டடி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் நா.தனேந்திரன் ஆகியோரும் அஞ்சலி உரைகளை ஆற்றினர். உரையாற்றிய அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது எமது கடமை என்பதை வலியுறுத்திப் பேசினர்.

விசேட நிகழ்வாக யாழ்.சின்மயா மிசனைச் சேர்ந்த ஜாக்கிரத் சைதன்ய சுவாமிகள் உயிரிழந்த ஆத்மாக்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனைப் பாக்களைச் சொல்லிக் கொடுக்க அங்கு கூடியிருந்த அனைவரும் உச்சரித்தனர். நன்றியுரையை ஊடகவியலாளர் செ.ரவிசாந் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்டச் சமாதான நீதவான் இ.கெங்காதரன்,ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையத் தலைவர் இ.விஷ்ணுறஞ்சன், குப்பிளான் வடக்குப் பிரதேசத்தின் ஓய்வு பெற்ற கிராமசேவகர் செ.ஞானசபேசன் உட்பட அப் பகுதிச் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மலையகத்தில் இடம்பெற்ற பாரிய நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்த உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வு இது என்பதுடன் கடந்த காலப் போரினால் முற்றாகச் சேதமடைந்த ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையம் புதிதாக நிறுவப்பட்டுக் குறுகிய காலத்தில் இவ்வாறானதொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வேறுபாடுகளை மறந்து மலையக சொந்தங்களுக்காக இவ்வாறான நிகழ்வு நடாத்தப்பட்டமை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.