யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வீதி விபத்து விழிப்புணர்வுச் செயலமர்வு

  யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வீதி விபத்து விழிப்புணர்வுச் செயலமர்வு

யாழ்ப்பாண வலய மாணவர்களிற்கான வீதி விபத்துகளால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்போம் என்ற மையக்கருத்துடனான விழிப்புணர்வுச் செயலமர்வின் முதல் நாள் அமர்வுகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

முதலில் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பித்தன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபரினால் மங்கல விளக்கேற்றப்பட்டதை அடுத்து மருத்துவ மாணவன் வை.சிந்துஜன் மற்றும் பாடசாலை மாணவ, மாணவியர் சார்பில் தலா ஒருவரும், ஆசிரியர் ஒருவராலும் மங்கல விளக்கேற்றப்பட்டது.

நிகழ்வின் அறிமுக உரை மருத்துவ மாணவன் வை.சிந்துஜன் அவர்களால் வழங்கப்பட்டது. அதை அடுத்து மருத்துவ மாணவி மா.மிதுசாவினால் வீதி விபத்து விழிப்புணர்வு விளக்கவுரை வழங்கப்பட்டதுடன் விழிப்புணர்வுப் படக்காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.

இதை அடுத்து தனித்தனி அமர்வுகளாக விழிப்புணர்வு கல்வியும், முதலுதவிப் பயிற்சி நெறியும் ஆரம்பமாகின. விழிப்புணர்வு கல்வி யாழ் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களால் சிறப்பாக வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பான கலந்துரையாடல் மாணவர்களின் சிறந்த பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மதிப்பீட்டு வினாத்தாள் வழங்கப்பட்டு பரீட்சிக்கப்பட்டது.

அதேவேளை முதலுதவிப் பயிற்சி நெறியின் ஆரம்ப உரை மருத்துவ மாணவி செ.றொக்சியாவினால் வழங்கப்பட்டதுடன் முதலுதவிப் பயிற்சிநெறி சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவின் பொறுப்பதிகாரியினால் சிறப்பாக வழங்கப்பட்டது.

மாணவர்களின் முதலுதவிப் பயிற்சியும் பரீட்சிக்கப்பட்டதுடன் மதிப்பீட்டு வினாத்தாளும் வழங்கப்பட்டு பரீட்சிக்கப்பட்டது.