யாழ். மாணவரிடையே அதிகரித்து வரும் போதைப் பாவனை

யாழ். மாணவரிடையே அதிகரித்து வரும் போதைப் பாவனை

யாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே போதைப் பொருள்பாவனை அதிகரித்துச் செல்கின்றது என்று கவலை தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்திலேயே இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பெரும் சமூகப் பிறழ்வு ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்படுகிறது.
 
யாழ். மாவட்ட செயலகத்தில் இந்த வார ஆரம்பத்தில் நடந்த சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
மாணவர்களிடையே போதைப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு கல்வித் திணைக்களத்தினூடாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இணையத்தள சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் கணினிகளைச் சுற்றித் தொடர்ந்தும் மறைப்புக்களை பயன்படுத்தி வருது, மாணவர்களின் தவறான நடத்தைகளுக்கு ஊக்க சக்தியாக இருப்பதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
 
சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் இணையத்தள சேவை வழங்கும் நிறுவனங்கள் மறைப்புக்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நடைமுறையை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
 
பாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புக்களை நடத்துவதை நிறுத்துவது தொடர்பிலும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உயர்தர வகுப்பு மாணவர்களுக்குப் பாடசாலை நேரத்தில் வகுப்புக்களை நடத்துவதால் அவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் தனியார் வகுப்புக்களுக்குச் செல்கின்றனர்.
 
இதனைத் தடுப்பதற்கு பாடசாலை நேரங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவதை தடுப்பதே சிறந்தது என்று சுட்டிக்காட்டப்பட்டது.