யாழ்.மாவட்­டத்தில் பருவ மழையை அடுத்து பாதீ­னியம் அதீத வளர்ச்­சி­

யாழ்.மாவட்­டத்தில் பருவ மழையை அடுத்து பாதீ­னியம் அதீத வளர்ச்­சி­

பருவ மழையை அடுத்து யாழ்.மாவட்டத்தில் பாதீனியம் அதீத வளர்ச்சியடைந்துள்ளதுடன் வயல் நிலங்களிலும் வீட்டு வளவுகளிலும் ஆக்கிரமித்து பூத்துக் குலுங்கின்றது.

பாதீனியம் இந்தியாவில் இருந்து 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்துடன் வடபகுதிக்கு வந்து சேர்ந்த தாவரமாகும். அதன் அதீத வளர்ச்சியால் மண்வளம் குன்றுவதோடு ஏனைய பயிரின் வளர்ச்சிக்கும் குந்தகம் ஏற்படுகிறது. அத்துடன் அதன் பூ, மகரந்தம், இலை மூலம் மனித சுகவாழ்வுக்கும் இடர் ஏற்படுவதோடு சுவாச நோய் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.

கோடை காலத்தில் பாதீனியத்தை பிடுங்கி அழிப்பதற்கு வடக்கு மாகாண காணி சுற்றுச் சூழல் அமைச்சு பல்வேறு படி நிலையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு ஊக்குவிப்பாக பிடுங்கப்பட்ட ஒரு கிலோ செடிக்கு ரூபா 10 வீதம் கொடுப்பனவும் வழங்கியது. ஆனால் இலக்கிற்கமைய இச்செடிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
 
தற்போதைய மாரி மழையினால் முன்னர் பிடிங்கி அழிக்கப்பட்ட பகுதிகளிலும் அதீத வளர்ச்சியுடன் பூத்துக் குலுங்குகின்றது. இதனால் மீண்டும் பாதீனியத்தை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அழிப்பு நடவடிக்கையின் ஒருகட்டமாக களை நாசினியை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

களை நாசினியை விசுறும் போது அதன் மூலம் சுற்றுச்சூழலில் உள்ள ஏனைய தாவரங்களும் பாதிக்கப்படலாம் என்பதால் கட்டுப்பாடான நிலையிலேயே மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

பாதீனியம் செடியின் அதீத வளர்ச்சியும் பரவலும் இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த சகல பகுதிகளிலும் காணப்படுகின்றபோதிலும் வலி.கிழக்கு, வலி.வடக்கு, வலி.தெற்கு, வடமராட்சி, தென்மராட்சி போன்ற பகுதிகளில் பெருமளவில் காணப்படுகின்றது.

பாதீனியத்தை கட்டுப்படுத்துவதிலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளிலும் திட்டமிட்ட இலக்கை எட்டுவதற்கு சமூகத்திலும் தனிநபர் மட்டத்திலும் தன்னார்வ நிலையும் பற்றுக்கோடும் ஏற்படாத நிலையில் அதனை கட்டுப்படுத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ ஏட்டுச்சுரைக்காய் என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.