யாழ்.வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்படவுள்ள மரக்கறிச் சந்தை

 யாழ்.வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்படவுள்ள மரக்கறிச் சந்தை

புதிய சந்தைக் கட்டட வேலைகள் நிறைவடைந்தும், அதனை மக்களின் பாவனைக்குத் திறந்து வைப்பதற்கு நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், மரக்கறிச் சந்தை வர்த்தகர்களினதும் பொதுமக்களினதும் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய , புதிய சந்தைக் கட்டடத்தை மரக்கறி வர்த்தகர்களிடம் கையளிப்பதற்கான நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

வல்வெட்டித் துறை நகரசபையின் தவிசாளர் ந.அனந்தராஜ் சுகவீனமுறடறுள்ள நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற போதும், பொது மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் அதற்கான சமயக் கிரிகைகளை மேற்கொண்டு வர்த்தகர்களிடம் கையளிக்குமாறு தவிசாளரால் செயலாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி நாளை புதன் கிழமை (25.06.2014) காலை 8.25 தொடக்கம் 9.45 மணிவரை உள்ள சுபவேளையில் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ.சோ.தண்டபாணிதேசிகர் அவர்களால், சமயக் கிரிகைகள் நடத்தப்பட்டு சாந்தி செய்யும் சமய நிகழ்வு இடம் பெற்று அவரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் நகரசபை அலுவலர்கள், உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் வல்வெட்டித்துறையின்vபொது அமைப்புக்கள் உட்பட பொது மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளனர்.

நகராட்சி மன்றத்திற்கான கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரம் ஒரு சில உறுப்பினர்களால் வழங்க மறுத்ததை அடுத்து பாரிய செலவில் திறப்பு விழாக்களையோ அல்லது வேறு எந்த விழாக்களையோ ஒழுங்கு செய்யமுடியாத நிலையில் வல்வெட்டித்துறை நகரசபை தற்போது உள்ளதால் சமய அனுஸ்டானங்களுடன், மிகவும் எளிமையான முறையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாகத் தவிசாளர் ந.அனந்தரஜ் தெரிவித்துள்ளார்.