லண்டனில் தமிழர் சலூன் ஒன்றில் தாக்குதல்: ஒருவர் படுகாயம்

லண்டனில் அமைந்துள்ள முடிவெட்டும் கடையில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

லண்டன், ரேனர்ஸ் லேனில் அமைந்துள்ள, ராஜா சலூன் என்ற பெயருடைய முடிவெட்டும் கடையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடையில் வேலை செய்யும் 50 வயதுடைய நபரே பயங்கரமாகத் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் 1.45 மணியளவில் குறித்த கடைக்கு அருகில் இருக்கும் கடைக்காரர்களால் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், தாக்குதலுக்குள்ளானவரை வைத்தியாசலையில் அனுமதித்துள்ளனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து ராஜா முடிவெட்டும் கடைக்கும் பக்கத்தில் உள்ள கடையைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளதுடன், கவலையினையும் தெரிவித்துள்ளனர்.

இது தெடர்பில் ராஜா முடிவெட்டும் கடையின் பக்கத்துக் கடைக்காரர், ரேனர்ஸ் லேனில் கடந்த 40 வருடங்களில் இதுபோன்ற அதிர்ச்சி தரும் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததே இல்லை என்று கூறியுள்ளார்.

ராஜா முடிவெட்டும் கடையினை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன், தடய நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லையென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.