வடக்கில் இன்று கனமழை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்

வடக்கில் இன்று கனமழை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்

இன்றைய தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்வதற்கான காலநிலை நிலவி வருகின்றமையினையடுத்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

2014ம் ஆண்டின் தொடக்கம் முதல் வடக்கின் 5 மாவட்டங்களிலும் 86 ஆயிரத்து 685 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையான குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீர் இல்லாமல் தவிப்பதாகவும், இதனால் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

மேற்படி விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகியன வடக்கின் மிக பிரதான வாழ்வாதார தொழில்கள் என்ற அடிப்படையில் மிகப்பெரும் வாழ்வாதார நெருக்கடியும் உருவாகும் என தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு சுட்டிக்கட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வீதிகளில் வெள்ளம் தேங்கும் அளவிற்கு கனமழை பெய்துள்ளதுடன், தொடர்ச்சியாக கனமழை பெய்வதற்கான காலநிலை நீடித்து வருகின்றது.

இதனால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் கடந்த 2013ம், ஆண்டில் பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு பருவமழையினை ஆவலோடு எதிர்பார்த்திருந்த விவசாய மக்களும் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளதுடன்,

தற்போதுள்ள காலநிலை தொடர்ந்து நீடிக்கும் எனவும், இடியுடன் கூடிய மழை தொடர்ச்சியாக பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை மத்திய நிலையம் இன்று மாலை தகவல் வெளியிட்டுள்ளது