12 மாணவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

12 மாணவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தின் நீர்த்தாங்கியில் கலக்கப்பட்ட நஞ்சு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 12 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்.

யாழ்.ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தின் நீர்த் தாங்கியில் விஷமிகளால் கலக்கப்பட்ட நஞ்சு காரணமாகப் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைகளுக்காக நேற்று மதியம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 மாணவர்களில் 12 மாணவர்கள் சிகிச்சைகளின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை(20.03.2015) மதியம் வீடு திரும்பியதாகப் பாடசாலையின் அதிபர்  தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய சிகிச்சைப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இவர்களில் நான்கு மாணவர்கள் நேற்று மதியம் வரை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த நிலையிலேயே இன்றைய தினம் குறித்த மாணவர்கள் வைத்திய சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினர்.

மூன்று நாட்கள் தொடர் சிகிச்சைகளின் பின்னர் ஏனைய மாணவர்கள் அனைவரும் நாளை சனிக்கிழமை வீடு திரும்புவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.