16 வயது இளைஞரைக் கடத்தியவர்களுக்கு மறியல்

16 வயது இளைஞரைக் கடத்தியவர்களுக்கு  மறியல்

யாழ்ப்பாணம் மட்டுவிலில் 16 வயது இளைஞரைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதான மூவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டார்.

மேலும் இவர்களை வரும் 21 ஆம் திகதி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும் பணித்தார். குறித்த சந்தேக நபர்கள் கடந்த வாரம் மட்டுவிலில் வீடு ஒன்றுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்தனர்.

அத்துடன் வீட்டில் நின்ற இளைஞரையும் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட இளைஞர் கைதடிப் பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து இளைஞரின் பெற்றோர் சாவகச்சேரிப் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய (வியாழக்கிழமை) தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.